தென்காசி மாவட்டத்தில் பிரபல குற்றவாளியை பிடிக்க மலையேறி சென்ற காவல்துறை அதிகாரிகள் பாறை மீது ஏறி சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேரம் கழித்து தீயணைப்புத்துறையினர் போராடி அனைவரையும் மீட்டனர்.

Continues below advertisement

போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ரவுடி

தென்காசி மாவட்டத்தின் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். பால முருகன் மீது திருச்சி, சென்னை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி என பல பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் பாலமுருகனின் மீது அவரின் சொந்த ஊரான கடையத்தில் உள்ள காவல் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் குற்றச் செயல்களை திறம்பட செய்யும் பாலமுருகன் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகுவதிலும் வல்லவராம். இந்த நிலையில் கேரளாவில் ஒரு குற்றம் செய்து அதனால் அவர் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2 வாரம் முன்பு அருப்புக்கோட்டையில் நடந்து வரும் வழக்குக்காக பாலமுருகனை ஆஜர்படுத்த தமிழ்நாடு போலீசார் அழைத்து வந்தனர். 

Continues below advertisement

சிறையில் இருந்து தப்பியோட்டம்

ஆனால் மீண்டும் திருச்சூர் சிறைக்கு சென்ற நிலையில் அங்கிருந்து அவர் தப்பினார். இதனால் 2 வாரமாக போலீசார் பல்வேறு இடங்களில் பாலமுருகனை தேடி வருகின்றனர். இந்த நிலையில் சொந்த ஊரான கடையம் அருகே ராமநதி அணைப்பக்கம் உள்ள பொத்தை எனப்படும் சிறிய மலைக்குன்றில் பாலமுருகன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சுமார் 1000  அடி உயரம் கொண்ட அந்த குன்றில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்றிரவு அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மலை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தேடும் முயற்சியில் அங்கிருந்த செங்குத்தான பாறை மீது 5 காவலர்கள் ஏறிய நிலையில் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. 

பாறையில் சிக்கிய போலீசார்

அவர்கள் அந்த மலைக்குன்றின் நடுப்பகுதியில் தொங்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தென்காசி, ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அதிகாலையில் முதற்கட்டமாக 3 பேரை மீட்டனர்.  பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீதமுள்ள 2 போலீசாரையும் தீயணைப்பு அதிகாரிகள் மீட்டனர். 

இந்த நிலையில் ட்ரோன் கேமரா உதவியுடன் மலையை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் ரவுடி பாலமுருகன் வழக்கம்போல அங்கிருந்து தப்பி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.