திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மாமதுரைக்கு என்ன தேவை என்பது மக்களே முடிவு செய்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுதொடர்பாக சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?. மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் சர்ச்சை பின்னணி

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் பின்னால் உள்ள மலையில் ஒரு புறம் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறமும் இஸ்லாமிய தர்காவும் உள்ளது. இந்த மலை உச்சியில் தீபத்தூண் ஒன்று உள்ளது. திருக்கார்த்திகையை முன்னிட்டு இந்த தூணில் தீபமேற்ற அனுமதிக்கக்கோரி இந்து அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபமேற்ற உத்தரவிட்டார். 

இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற அனுமதிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். ஆனால் மாலையில் தீபமேற்ற அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து மனுதாரர்களில் ஒருவரான ராமரவிகுமார் தலைமையில் 10 பேர் குழு தீபமேற்ற வேண்டும். இதற்கு நீதிமன்றத்தில் பாதுகாப்பில் உள்ள சிஎஸ்ஐஎஃப் வீரர்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். 

ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உண்டாகலாம் என கூறி தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. தொடர்ந்து வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் என தெரிவித்தனர். இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். 

தொடர்ந்து மாலை 7 மணிக்குள் தீபமேற்ற வேண்டும்.மதுரை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர். 

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2014ம் ஆண்டு நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக விளக்கமளித்தார். தமிழகத்தில் இந்த விவகாரம் மூலம் மதவாதிகள் உள்நுழைய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.