ஆந்திர மாநிலம் அனந்த்புர் மாவட்டம் குண்ட கல் பகுதியை சேர்ந்தவர் நாம் தார் உசேன் (34). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஓசூர் பகுதிகளிலும் இவர் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக ஓசூர் அட்கோ போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு சென்று நாம் தார் உசேனை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிடித்து வந்துள்ளனர்.


ஓசூரில் பரபரப்பு சம்பவம்:


இதனைத் தொடர்ந்து அவரை இன்று ஓசூர் திருப்பதி மெஜஸ்டிக் என்ற பகுதியில் திருட்டு நடந்த இடத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, போலீசார் மூன்று பேரை சரமாரியாக தாக்கி தப்பித்து ஓட முயன்று உள்ளார். இதனை அடுத்து, எஸ்ஐ வினோத் தான் வைத்திருந்த துப்பாக்கியால்  அவரை சுட்டு மடக்கி பிடித்தார்.


குற்றவாளி தாக்கியதில் எஸ்ஐ வினோத், தலைமை காவலர் ராமசாமி, முதல் நிலை காவலர் வெளியரசு ஆகியோருக்கு கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இவர்கள் தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, வலது காலில் குண்டடிபட்ட நாம் தார் உசேன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


காவல்துறையினர் மீது அதிகரிக்கும் தாக்குதல் சம்பவங்கள்:


சமீப காலமாக, காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டரைவாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் தொழிற்சாலையில் வட மாநில வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.


இதன் புகார் சம்பந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் நிலை காவலர் ரகுபதி என்பவர் விசாரிக்க சென்றார். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பொழுது, எதிர்பாராத விதமாக காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


இதையும் படிக்க: Beetroot Uttapam: ஆரோக்கியமான பீட்ரூட் ஊத்தப்பம்.. ஈஸியா செய்வது எப்படினு தெரிஞ்சிக்கோங்க!