சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகளை சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து நேற்று மாலை அவர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சருடன் தலைமைச் செயாளர் இறையன்பு, தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு ஆகியோரும் பங்கேற்றனர்.
முதலமைச்சரின் ஆய்வுக்கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிவக்குமார், கலைச்செல்வன், ஸ்டீபன் ஜேசுபாதம், சரோஜ் குமார் தாக்கூர், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, சேலம் மாநகர துணை ஆணையாளர்கள் மாடசாமி, லாவண்யா, மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலவரம், குற்ற நிகழ்வுகளை தடுப்பதற்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சுமார் மூன்று மணி நேரம் வரை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் காவல் துறையினர் இடையே உரையாற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், ”காவல்துறையினர் போதைப் பொருட்களை அழிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் இளைஞர் எதிர்காலத்தை சீரழிக்கின்ற போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க காவல்துறையினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போதைப்பொருட்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. பொதுமக்கள் வணிகர்களிடையே போதுமான விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார். ”எந்த சூழ்நிலையிலும் சாதிக் கலவரங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். குற்றச்சன்பங்களை தடுக்க காவல்துறையினர் வருவாய்த்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும். நம் பணி மக்களுக்கானது என்ற ஒரே இலக்கு என்பதை உணர வேண்டும்” என்று கூறினார்.