தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து, கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலமாக சேலம் மண்டலத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். இதனிடையே சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதிக்கு சென்ற தமிழக முதல்வர் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மார்டன் தியேட்டர் நினைவு வளைவை பார்வையிட்டார். பின்னர் தனது செல்போனில் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவினை புகைப்படம் எடுத்த முதல்வர், மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பாக நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.



தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர். சேலம் மாநகரின் மிகப்பழைமையான அடையாளங்களுள் ஒன்றாகவும் இது இருக்கிறது. 1935 ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் என்பவரால் மாடர்ன் தியேட்டர்ஸ் தொடங்கப்பட்டது. சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட ஸ்டூடியோக்களில் மிக நீண்டகாலம் இயங்கியும், அதிக வெற்றிப்படங்களை கொடுத்த நிறுவனம் என்ற பெருமையும் மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு உள்ளது.



இதே காலகட்டத்தில்தான் தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி திரைத்துறையில் வசனகர்த்தாவாக தனது பயணத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் இருந்து தொடங்கினார். அவரது ஆரம்ப காலத்திலேயே கருணாநிதியின் திறமையை உணர்ந்து கொண்ட டி.ஆர் சுந்தரம், அவரை மாடர்ன் தியேட்டரின் கதை வசன இலாகாவில் பணிபுரிய வைத்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய 'மந்திரிகுமாரி' மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன் கருணாநிதி, எம்.ஜி.ஆர் என இருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாடர்ன் தியேட்டர் பகுதியை பார்வையிட்டு வருகிறார். தந்தையின் வாழ்க்கை பயணம் துவங்கிய இடம் என்பதால் பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்து பார்வையிட்டு வருகிறார்.