ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.
இதற்கிடையே படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
எனினும், ஜெய் பீம் திரைப்படத்தை சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓயவில்லை. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியது.
மேலும், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக அமேசான் ஓடிடி தளத்திற்கு நேற்று வன்னியர் சங்கம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், படத்தில் இடம் பெற்றிருந்த அக்னி குண்டத்தை அகற்ற வேண்டும் என்றும், ஏழு நாட்களுக்குள் ₹5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, வன்னியருக்கு எதிராக தவறான தகவல்களை இனிமேல் பரப்ப கூடாது என்று தெரிவித்து படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக, நடிகர் சூர்யாவை சப்போர்ட் செய்வதாக அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் நடிகர் சூர்யாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இந்தநிலையில், சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யாவிற்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து சென்னை தியாகராய ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவிற்கு தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக மிரட்டல்கள் வந்ததையடுத்து பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.