மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உபரிநீர் பயன்பாட்டு திட்டத்திற்காக திப்பம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன் சேலம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நடப்பாண்டில் உபரிநீரை ஏரியில் நிரப்பும் பணியினை தொடங்கி வைத்தார். இதன் மூலம் காளிப்பட்டி ஏரி, ராயப்பன் ஏரி, முத்தாம்பட்டி ஏரி மற்றும் மானத்தாள் ஏரி ஆகிய நான்கு ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படும்.
அணையை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி கடந்த 3 தினங்களாக அதே நிலையில் இருக்கிறது. ஆகையால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் மேலும் வருமானால் அந்நீர் உரிய வழிகளில் வெளியேற்றப்படும். மேட்டூர் அணை உபரிநீர்த் திட்டம் 565.00 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் இன்னும் முழுமையடையாத காரணத்தால் இன்றைய தினம் 5 குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறது. மேலும், இத்திட்டத்திற்கு இன்னும் நிலம் எடுக்கும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அதுகுறித்து நமது செயலாளர் அவர்கள் அதிகாரிகளை விரைவுபடுத்தி, நிலம் எடுக்கும் பணிகளை துரிதப்படுத்தி இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு அணையை பலப்படுத்த கேரளா மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவுகள் எட்டப்படவில்லை. எனவே, அணையின் நீர்மட்டத்தை ஒவ்வொரு அடி உயர்த்துவதற்கும் உச்சநீதிமன்றத்தை அணுகி தான் உயர்த்தியுள்ளோம். உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையை மூன்று கட்டங்களாக பலப்படுத்த சொன்னார்கள்.
1979ஆம் ஆண்டுதான் முல்லை பெரியாறு அணை பிரச்சனை ஆரம்பித்தது. அப்போது அணையின் நிலை மிக மோசமாக உள்ளது என்று பத்திரிக்கைகளில் எழுதினார்கள். அப்போதைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் திரு. கே.சி. தாமஸ் அவர்கள் மத்திய நீர் வள குழு பொறியாளர்களுடன் நேரில் வந்து ஆய்வு செய்து அணை பலமாகவே இருக்கிறது. இதனால் யாரும் பயப்பட தேவையில்லை என்றும், பூகம்பங்கள் ஏற்பட்டாலும் ஒன்றும் ஆகாது என அணையின் மீது நின்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகளை திருவனந்தபுரத்திற்கு வாருங்கள் என்று கூறினார். அங்கு சென்று அதிகாரிகளிடம் 152 அடி தண்ணீரை 136 அடி வரை மட்டுமே தேக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும், மூன்று கட்டங்களாக இந்த அணையை பலப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களையும் வழங்கினர். அதில் இரண்டு கட்டங்களாக பலப்படுத்திய பிறகு 142 அடி வரை தேக்கிக் கொள்ளலாம் எனக் கூறினார். அதனடிப்படையில் இரண்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு அணை பலப்படுத்தப்பட்டது,
1979 ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக அணையை பலப்படுத்தக் கூறிய பிறகு, 1989 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அப்போதைய பொதுப் பணித்துறை அமைச்சரான நான்தான் அப்பணிகளை செய்து முடித்தேன். அப்பணிகளை முடித்தபிறகும் கூட கேரளா மாநிலம் இதற்கு ஒத்து கொள்ளவில்லை. கேரளா மாநிலத்தில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் மற்ற நிருபர்கள் 136 அடிக்கு மேல் நீர் தேக்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். மேலும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உச்சநீதிமன்றம் 142 அடி வரை தேக்கலாம் என்று கூறியது. இதற்கிடையில், கேரளா மாநில அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் எத்தனை அடி வரை தண்ணீரை தேக்கலாம் என்று மாநில அரசே தீர்மானிக்கும் என்று சட்டம் கொண்டு வந்தனர். கர்நாடகா மாநிலம், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்து வழங்க வேண்டும். அந்த திட்ட அறிக்கைக்கு அணையின் கீழ் பகுதியில் உள்ளவர்களான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசுகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அணை கட்ட முடியும் என்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே விட்டுக்கொடுக்கப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.