தமிழ்நாட்டில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பணிகளிலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கலாச்சாரம் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 
அந்தக் கடிதத்தில்,


’அன்புள்ள திரு. மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு,
 வணக்கம்!
பொருள்:  தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் நடைபெறும் பணியாளர் தேர்வில்  விளையாட்டு மற்றும் கலாச்சார இட ஒதுக்கீடு வழங்கக் கோருதல் & தொடர்பாக
தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை நியமனங்களில் விளையாட்டு மற்றும் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துவதற்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.


Also Read:'தோண்டி எடுத்து திட்டாதீங்க...’ வீடியோவில் கதறிய ரவுடி பேபியின் ‛சிக்கா’


தமிழ்நாட்டில் மருத்துவத்துறைக்கு தேவையான மருத்துவர்கள் முதல் துணை மருத்துவப் பணியாளர்கள் வரை 4 நிலை மருத்துவ சேவைகளை வழங்கக் கூடிய 9 இயக்குனரகங்கள்/ ஆணையங்களின் கீழ்  வரக்கூடிய 200&க்கும் மேற்பட்ட பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த வாரியத்தின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க வாரியத்தின் மூலம் நடைபெறும் பணி நியமனங்களில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள்/ கலாச்சாரத்தில் சிறந்த கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.


தேசிய அளவில் தொடர்வண்டித்துறை நிறுவனங்கள், பல்வேறு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் விளையாட்டு மற்றும் கலாச்சார இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் செவிலியர்கள், ஊடுகதிர் தொழில்நுட்பர்கள் (X-ray  Technicians), ஆய்வக தொழில்நுட்பர்கள் (Lab  Technicians) உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணி நியமனங்களில், சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கும், கலாச்சாரக் கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


மத்திய அரசு நிறுவனங்களாக இருந்தாலும், மாநில அரசு நிறுவனங்களாக இருந்தாலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்களுக்கு என விழுக்காடு கணக்கில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை என்பது உண்மை தான். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஆண்டிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும், கலாச்சாரக் கலைகளில் சாதித்தவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. இது விளையாட்டுகளும், கலைகளும் வளர்வதற்கு பெரிதும் துணையாக உள்ளன.


தமிழ்நாடு அரசிலும் சில துறைகளின் பணிகளில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், மருத்துவத்துறையில் விளையாட்டு, கலாச்சாரக் கலைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டில் விளையாட்டு, கலாச்சாரக் கலைகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.


பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டு, கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால் அவர்கள் கல்லூரிப் படிப்பின் போதும் படிப்பை விட,  கலையிலும், விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கல்வியைக் கடந்து செவிலியர்கள், மருந்தாளுனர், ஊடுகதிர் தொழில்நுட்பர்கள், ஆய்வக தொழில்நுட்பர்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த அனைத்து வகை வேலைவாய்ப்புகளிலும் விளையாட்டு மற்றும் கலாச்சார இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அது அந்த இருதுறைகளிலும் சிறந்த சாதனை படைத்தவர்களை ஊக்குவிப்பதாக அமையும். அதுமட்டுமின்றி, அவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும், பன்னாட்டு அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று மருத்துவத்துறைக்கு பெருமை தேடித் தருவார்கள். மருத்துவத் துறையில் அரசுப் பணி கிடைக்கும் என்று தெரிந்தால் இன்னும் பலர் விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தில் சாதனைப் படைக்க முயல்வார்கள்.


அண்மையில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் பதக்கம் வெல்லவில்லை என்பது நமக்கு பெருங்குறையாக உள்ளது. இனிவரும் காலங்களிலாவது  பன்னாட்டுப் போட்டிகளில் தமிழர்கள் சாதனை படைக்க வேண்டும். அதற்காக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும். கலாச்சாரக் கலைகளில் சிறந்து விளங்குபவர்களை அரசு வேலை வழங்கி ஊக்குவிக்கும்பட்சத்தில் அவர்களும் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தருவார்கள்.


இவற்றையும், பல்வேறு மாநிலங்களில் உள்ள நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணி நியமனங்களிலும் விளையாட்டு மற்றும் கலாச்சார இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கோரியுள்ளார்.