சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருத்தளிநாதர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலத்தில் இது 6-வது தலமாகும். சம்மந்தர், அப்பர், அருணகிரியார் பாடப்பெற்ற தலமும் என்பது குறிப்பிடதக்கது. இந்த கோயிலில் உள்ள யானைக்கு அம்பாளின் பெயரே ’சிவகாமி’ என வைக்கப்பட்டுள்ளது. சிவகாமி யானை 52 ஆண்டுகள் இறைப்பணி செய்த நிலையில் நேற்று உயிரிழந்தது. கடந்த சில தினங்களாக உடல் சோர்வாக காணப்பட்டது.
இதனால் கால்நடை மருத்துவர்கள் அவ்வப்போது சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிவகாமி யானை உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 54 வயதான சிவகாமி யானை சிறுகூடல்பட்டி விசாலாட்சி என்பவரால் 1967- ம் ஆண்டில் இரண்டு வயது குட்டியாக கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது. யானை சிவகாமி கடந்த சில நாட்களாக கால் வலியால் இருந்தது சத்தியமங்கலம் அரசு வனத்துறை மருத்துவர் அசோக்குமார், குன்றக்குடி முன்னாள் கால்நடை மருத்துவர் அன்பு நாயகம், திருப்புத்தூர் கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கொண்ட குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக யானை உயிரிழந்தது.
யானை இறந்த தகவல் குறித்து குன்றக்குடி அடிகளாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோயிலுக்கு விரைந்து வந்து இறந்த யானை சிவகாமியை பார்த்தார். யானைக்கான இறுதி காரியங்களுக்கான ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டு இறந்த யானை சிவகாமிக்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்து வேஷ்டி சாத்தினார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
அதனை தொடர்ந்து சத்தியமங்கலம் கால்நடை மருத்துவர் அசோக்குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராமேஸ்வரன், திருப்புத்தூர் தாசில்தார் ஜெயந்தி, டி.எஸ்.பி பொன்.ரகு, திருப்புத்தூர் வனச்சரக அலுவலர் மதிவாணன், வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் குணாஆகியோர் அஞ்சலி செலுத்தினர், அதனை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 54 ஆண்டுகளாக குன்றக்குடி மக்களுடன் இணைந்திருந்த யானை சிவகாமியின் நினைவுகளை பலரும் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'ஆன்லைன் ஆதீனமாக' மாறும் நித்தியானந்தா...!- பொருட்படுத்தாத மதுரை ஆதீன நிர்வாகம்...!