தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாம் நாள் நடைபயண பிரச்சாரத்தினை குறும்பட்டி டீக்கடை பகுதியில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்கினார்.


அங்கே பொதுமக்களிடையே பேசுகையில், "தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டம் நமக்கு மிகவும் அவசியமான திட்டமாகும். நமக்கு இங்கே கிடைக்கும் தண்ணீர் சுத்தமானது இல்லை. இங்கே நமது பல்லெல்லாம் மஞ்சளாக இருக்கிறதே, அதற்கு காரணம் நமக்கு கிடைக்கும் தண்ணீரில் கலந்திருக்கும் புளுரைடு என்ற நச்சுப்பொருள். அந்த நச்சுப் பொருளினால் எலும்புகளுக்கு பிரச்சினை மூளைக்கு பிரச்சினை மலட்டுத்தன்மை பிரச்சனை என உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கியிருக்கிறது. காலம் காலமாக நாம் அந்த பிரச்சினைகள் எல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொழுது நமக்கு நல்ல தண்ணீர் கிடைக்கும். விவசாயம் பெருகும். வாழ்வாதாரம் சிறக்கும். 


இங்கே விவசாயம் செய்பவர்கள் அனைவருமே வானம் பார்த்த பூமியாக தான் விவசாயம் செய்து கொண்டு வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை நம்பி ஒருபோகம் செய்கிறார்கள். வடகிழக்கு பருவ மழை பெரிதாக பயன் இல்லாமல் போகிறது. இங்கே நாம் செய்யக்கூடிய விவசாயம்  நமக்கு பயனளிக்காமல் போகவே, வேலை தேடி திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, பெங்களூர், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா என சுமார் 5 லட்சம் மக்கள் இந்த மாவட்டத்தை விட்டு வெளியே சென்று வாழ்வாதாரம் தேடி வாழ்ந்து வருகிறார்கள்.


இங்கே தொழில் வளர்ச்சி எதுவும் இல்லை. தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததனால் அனைவரும் வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களை நாடி சென்று கொண்டிருக்கின்றனர். சுமார் 25 வருடங்களாக சிப்காட் அமைக்கிறோம் சிப்காட் அமைக்கிறோம் என மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர இதுவரை அமைத்தபாடில்லை. 


சுமார் 55 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கெல்லாம் இந்த திட்டத்தினை பற்றி தெரியவும் இல்லை. இது பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு சிந்தனை எல்லாம் தேர்தலை பற்றி தான் இருக்கிறது. நான் நம்முடைய அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். தேர்தல் வரும் போகும், அதில் எப்படி வெற்றி பெற வேண்டும், எதைக் கொடுத்தால் நீங்கள் அவர்களுக்கு ஓட்டு போடுவீர்கள் என்று தான் அவர்கள் சிந்திப்பார்களே தவிர, நான் அவ்வாறு சிந்திக்கவில்லை. உங்களுடைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என அடுத்த ஐம்பது வருடங்கள் அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகள் நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்று நான் சிந்திக்கின்றேன். 


மேலும் இங்கே நான் அரசியலுக்காக வரவில்லை. சாதி, மத பேதங்களை கட்சிகளை கடந்து எல்லாம் ஒன்றிணைந்து வாருங்கள். இது நம் மாவட்டத்தினை பலப்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும்.




இந்த திட்டத்தினை வலியுறுத்தி தான் மூன்று நாள் நடைபயணமாக நேற்று ஒகேனக்கலில் முதல் நாள் பயணத்தை தொடங்கினேன். இன்று இரண்டாவது நாள் பயணத்தை உங்களோடு தற்பொழுது தொடங்கியிருக்கிறேன். இந்த திட்டம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 18 லட்சம் மக்களில் 15 லட்சம் மக்கள் பயன்பெறக்கூடிய திட்டமாகும். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் உள்ள மக்கள் பயன்படக்கூடிய ஒரு திட்டமாகும். நல்ல ஆட்சியாளர்களாக இருந்தால், இந்நேரம் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு மாவட்டத்தில் 80 சதவீதம் மக்கள் பயன் பெறுவார்களா? அப்படியானால் என்ன செலவானாலும் இவர்களுக்கு இந்த திட்டத்தை செய்து கொடுத்து ஆக வேண்டும், நிதி ஒதுக்கியாக வேண்டும் என்று தான் நினைத்திருப்பார்கள். இவர்கள் நினைத்தார்களா?  இவர்கள் செய்தார்களா? இவர்கள் நல்ல ஆட்சியாளர்களா? என்பதை நீங்கள் தான் எண்ணி பார்க்க வேண்டும்.


எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், இந்த திட்டத்தினை 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றி இருப்பேன்.  எவ்வளவு தண்ணீர் காவிரியில் சென்றது என்று, சில நாட்களுக்கு முன்பு நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ஒரே நாளில் 16 டிஎம்சி தண்ணீர் காவிரியில் கடந்து சென்றது. அதில் 3 டிஎம்சி மட்டுமே தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையானது.  


காவிரியில் செல்லும் நீரானது, மேட்டூர் அணையில் 93 டிஎம்சி தான் தேக்கி வைக்க முடியும். மற்ற நீரெல்லாம் அணையைக்கடந்து உபரிநீராக கடலில் தான் கலக்கின்றன. அவ்வாறு இந்த வருடத்தில் இன்று வரை சென்ற தண்ணீர் மட்டும் 180 டிஎம்சி. ஆனால் நமக்கு தேவையோ வெறும் மூன்று டிஎம்சி மட்டும்தான். 




நீரேற்று முறையில் கென்டையன்குட்டை குளத்தில் தேக்கி வைத்து அங்கிருந்து குழாய்கள் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் மற்ற பகுதி அனைத்திற்கும் கொண்டு செல்ல முடியும். அந்த குளமும் போதவில்லை என்றால் நல்ல உயரமான  இடத்தில் நூறு ஏக்கரை தேர்வு செய்து, நல்ல குளத்தை வெட்டுங்கள். குளத்தில் சேமித்து வையுங்கள். அதிலிருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்புவதற்கு திட்டத்தை உருவாக்குங்கள். அங்கிருந்து கொண்டு வரும் தண்ணீர் மூலம் இங்கே இருக்கும் ஏரி குளங்கள் அணைகள் அனைத்தையும் நிரப்பி வையுங்கள். நிரப்பி வைப்பதன் மூலம் மேலும் ஒரு லட்சம் ஏக்கர்கள் விவசாயத்தினை அதிகரிக்க முடியும். அதன் மூலம் வாழ்வாதாரம் தேடி, ஊரை விட்டு வெளியூர் சென்ற உங்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இப்படிப்பட்ட திட்டத்திற்கு நீதி ஒதுக்குவார்களா? இல்லை இவர்கள் கொடுக்கும் ஆடு, மாடு, கிரைண்டர்,மிக்சி, டிவி இதற்கெல்லாம் நிதி ஒதுக்குவார்களா? 


இந்த நடைபயண பிரச்சாரத்தின் மூலம் நாம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது நாம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையை அரசுக்கு உருவாக்க வேண்டும். சென்னையில் இருப்பவர்களுக்கு செய்தியை தெரிவிக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால் அவர்கள் விடமாட்டார்கள் என்ற எண்ணத்தினை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.


தற்பொழுது அமைதியாக அன்பாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, என் தம்பி தங்கைகள் பொறுக்க மாட்டார்கள். என் தம்பிகள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள், போராட்டம் எப்பொழுது? போராட்டம் அறிவியுங்கள் என்று.. என் தம்பிகள்தான் கேட்கிறார்கள் என்றால், என் சகோதரிகள் அவர்களை விட துடிப்பாக இருக்கிறார்கள். இந்த திட்டத்திற்காக அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நிறைவேற்றி தரும். அப்படி  தரவில்லை என்றால் அடுத்த கட்டம் அடுத்த கட்டம் என போராட்டம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். நீங்களும் தயாராக இருக்க வேண்டும். நிச்சயமாக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் நிம்மதியுடன் செல்லுங்கள். நல்லதே நடக்கும் என்றே நம்புவோம், உங்களை எல்லாம் நேரில் பார்த்தவரையில் மகிழ்ச்சி"  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.