மழைக் காலத்தை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அனைத்து வகை பள்ளிகளில்‌ மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்‌ குறித்த அறிவுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 


தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ அனைத்து வகைப் பள்ளிகளிலும்‌ நடப்பு 2022- 2023ஆம்‌ கல்வியாண்டிற்கான கற்றல்‌- கற்பித்தல்‌ செயல்பாடுகள்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அரசு / நகராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ எதிர்வரும்‌ மழைக் காலத்தை கவனத்தில்‌ கொண்டு மேற்கொள்ள வேண்டிய கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள்‌ வழங்கப்படுகின்றன.


1. எல்லா பள்ளிகளிலும்‌ மரங்கள்‌ உள்ளன. மரத்தில்‌ இருந்து உதிரும்‌ இலைகள்‌ பள்ளிக்‌ கட்டிட மேற்கூரையில்‌ விழுந்து குப்பையாகச் சேர்ந்துள்ளது. பல பள்ளிகளில்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளும்போது தெரிய வருகின்றது. மழையின்போது இக்குப்பைகள்‌ நீரில்‌ நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும்‌ மேற்கூரையில்‌ உள்ள காய்ந்த இலைகள்‌ / சருகுகளை அகற்றிட கேட்டுக்‌ கொள்ளப்படுகின்றனர்‌.


2. ஒவ்வொரு பள்ளியிலும்‌, ஒவ்வொரு கட்டிடத்தின்‌ மேற்கூரையில்‌ மழை நீர்‌ தேங்காதவாறும்‌, மழை நீர்‌ வடிவதற்கான துவாரங்கள்‌, இலை தழைகள்‌ மற்றும்‌ குப்பைகளால்‌ அடைபடாதவாறும்‌ தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.


3. தண்ணீர்‌ தேங்கி கொசுக்கள்‌ உற்பத்தி ஆகாத வண்ணம்‌ பள்ளிகளில்‌ உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளவும்‌, பள்ளி வளாகத்தின்‌ தேவையான‌ பகுதிகளில்‌ கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில்‌ பள்ளி செயல்படுவதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.


4. பள்ளி வளாகம்‌ புதர்கள்‌ மற்றும்‌ குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும்‌ தூய்மையாகவும்‌ இருக்கும்‌ வகையில்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.


5. பள்ளி மாணவர்களை இத்தகைய தூய்மைப்‌ பணிகளை செய்வதற்குப் பயன்படுத்தக்‌ கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. பள்ளி பராமரிப்பு மான்யத்தினைக்‌ கொண்டு வெளி ஆட்கள்‌ அல்லது உள்ளூர்‌ நபர்கள்‌ / பணியாளர்களை கொண்டு இத்தகைய தூய்மைப்‌ பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌.


6. பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதற்கு 100 நாட்கள்‌ வேலை வாய்ப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பணிபுரியும்‌ பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்கள்‌ அணுகிப்‌ பெற்று, பள்ளியின்‌ பராமரிப்பு பணிகளை சீர்‌ செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம்‌.


7. நடமாடும்‌ மருத்துவக்‌ குழு, ஆரம்ப சுகாதார நிலையம்‌ மற்றும்‌ செவிலியர்‌ ஆகியோரின்‌ தொலைபேசி எண்கள்‌ பள்ளியின்‌ அறிவிப்புப்‌ பலகையிலும்‌ தலைமை ஆசிரியர்‌ அறையிலும்‌ எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.


மேற்கண்ட அறிவுரைகளை மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌ பள்ளிப்‌ பார்வை மற்றும்‌ ஆய்வின்‌போது மேற்கண்ட அறிவுரைகள்‌ சரியாக பின்பற்றப்படுகின்றதா? என்பதைத் தொடர்ந்து கண்காணித்திடவும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.