பிரதமர் மோடி கடந்த வாரம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நந்தனத்தில் உரையாற்றிய நிலையில், மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 15ம் தேதி பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த முறை சேலத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது, பாஜக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதோடு, இந்த தேர்தலில் எப்படியும் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிட அக்கட்சி மிகுந்த தீவிரம் காட்டுவதையும், பிரதமர் மோடியின் வருகை உணர்த்துகிறது.
- கடந்த ஜனவரி 3ம் தேதி நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதோடு, திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தையும் திறந்து வைத்தார்.
- கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்றும் இறைவழிபாடு நடத்தினார்.
- கடந்த மாதம் 27ம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். அப்போது பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதோடு, குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
- இறுதியாக, கடந்த 4ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் நடப்பாண்டில் 5வது முறையாக வரும் மார்ச் 15ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.