ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் நடந்த ஏலத்தில் ஒரு எலுமிச்சை பழம் ரூபாய் 35 ஆயிரத்துக்கு ஏலம் போயியுள்ளது. 


சிவன் கோயில்:


ஈரோடு நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் சிவகிரி கிராமம். இந்த கிராமத்திற்கு அருகே உள்ள பழபூசையன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு மஹாசிவராத்திரி விழாவையொட்டி சிவபெருமானுக்குப் படைக்கப்பட்ட எலுமிச்சை, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலம் ஆண்டு தோறும் நடைபெறும். 


35 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சை:


ஏலத்தில் 15 பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் ஏலத்தில் மாறி, மாறி தொகையை ஏற்றிக்கொண்டே போனார்கள். இதனால் இறுதியில் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பக்தர் எலுமிச்சை பழம் ரூபாய் 35 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுத்தார். இந்த ஏலம் கோவிலில் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 





 ஏலம் முடிந்த பின்னர் கோவில் பூசாரி, ஏலம் விடப்பட்ட எலுமிச்சம்பழத்தை பழபூசையன் மூலவர் முன் வைத்து, சிறு பூஜை செய்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கியவருக்கு கொடுத்தார். எலுமிச்சையை ஏலத்தில் எடுத்தவர் அந்த எலுமிச்சையை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார். 


இந்த கோவிலில் எலுமிச்சம்பழத்தை ஏலம் எடுப்பவர், பல வருடங்கள் செல்வம் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார் எனவும் அதற்கு பழபூசையன் உதவியாக இருப்பார் என பக்தர்கள் நம்புகின்றனர்.