பிரதமர் நாளை சென்னை வருவதையொட்டி என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.


சென்னையில் நடக்க இருக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வரவிருக்கிறார். அதனை முன்னிட்டு, அவரின் பாதுகாப்பிற்காக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் பிரதமர் முதற்கட்டமாக, நாளை மாலை சென்னை நேரு விளையாட்டரங்கில் செஸ் போட்டியை தொடங்கி வைக்கிறார்.




அதனைத்தொடர்ந்து நாளை மறுகாலை அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில், பங்கேற்க இருக்கிறார். பிரதமரின் வருகையொட்டி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதற்காக சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  இதில், 4 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள், 26  துணை கமிஷனர்கள், கமாண்டோ  படை வீரர்கள்,   ஆயுதப்படை சிறப்பு படை வீரர்கள் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். 


5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு 


பிரமரின் வருகையையொட்டி,  சென்னை விமான நிலையம்,  சென்னை தீவுத்திடல்  அருகே உள்ள ஐ.என்.எல் கடற்படை பகுதி , நேரும் உள்விளையாட்டரங்கம், அண்ணா பல்கலைகழகம், மற்றும் அவர் தங்கும் இடமான கிண்டி கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளிலும், அவர்  செல்லும் வழித்தடங்களிலும்  5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


இந்த பகுதிகள் பலத்த பாதுகாப்பு வளையத்தில்  வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தங்கும்  விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா என்று காவல்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ரயில், பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


பிரதமரின் வருகையையொட்டி  சென்னையில் நாளையும், நாளை மறுதினமும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி  வாகனங்கள் பறக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல பிரதமர் செல்லும் பாதைகளில் 10 அடிக்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். இன்று மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. 


போக்குவரத்தில் என்ன மாற்றம் 


நாளை பிரதமர் வருகையையொட்டி, ஈவெரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேவைக்கேற்ப, டின் டிமல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் ராஜா முத்தையாச் சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது.




அது போலவே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து  ராஜா முத்தையாச் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வாகனங்கள் ஈவெரா சாலை, கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச்சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்புலிருந்து சென்ட்ரல் நோக்கி  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதுபோல பிராட்வேயிலிருந்து  வருகிற வணிக வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம்.