பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


பிரதமரின் பயணம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்படும் அப்படியிருக்க வரும் 30ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் எங்கிருந்து பரவியதென்று தனக்குத் தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த உத்தமத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர் என்று நூல்கள் கூறுகின்றன. இது போன்று மேலும் பல்வேறு சிறப்புகளுக்குரிய அவரின் 115-வது ஜெயந்தி விழா வரும் அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் தேவர் ஜெயந்திக்காக பிரதமர் நரேந்திர் மோடி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனைக் குறிப்பிட்டே பிரதமரின் பயணம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்படும் அப்படியிருக்க வரும் 30ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் எங்கிருந்து பரவியதென்று தனக்குத் தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதுபோல் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை தேவர் ஜெயந்தியில் வைத்து பிரதமர் மோடி அறிவிப்பதாக வெளியான தகவலும் பொய் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்தாண்டு தேவர் ஜெயந்தியின்போது பிரதமர் மோடி, முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர். மிக உயர்ந்த துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்டவர்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.


2 மாதங்களுக்கு 144 தடை:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை விதித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை மறுநாள் (செப். 11) கடைபிடிக்கப்படுகிறது. பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா அக். 28 முதல் அக். 30 வரை நடைபெறுகிறது.


இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை எஸ்பி தங்கதுரை பரிந்துரையின்படி, கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பிறப்பித்துள்ளார். இத்தடை உத்தரவு அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும். இக்கால கட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுமதியின்றி நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் குரு பூஜைக்கு அஞ்சலி செலுத்த வர விரும்புகின்றவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்ற பிறகுதான் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.