தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகிறது. 


தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதிகளில் ஒருவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். அங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவாக இருந்து வந்த அவரை பக்தர்கள் அன்போடு “அம்மா” என்றழைப்பது வழக்கம். 82 வயதான பங்காரு அடிகளார் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கோயில் வளாகத்திலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று (அக்டோபர் 19) மாலை 5 மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. 




இதனையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பங்காரு அடிகளார் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழக மக்களையும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்தவுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வந்து பங்காரு அடிகளார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் வண்ணம் உள்ளனர். இப்படியான நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார். 






இதற்கிடையில் இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடக்கவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். 


மேலும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தார். அவரது பணி தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று மேல்மருவத்தூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.