தமிழ் திரையுலகில் காலத்தால் என்றும் மறையாத அளவிற்கு பெரும்பங்கு அளித்த பாடலாசிரியர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பிறைசூடன். 65 வயதான இவர் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பது தமிழ்த் திரையுலக பிரபலங்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திரைப்பயணம்:


திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி பிறந்தவர் பிறைசூடன்.  1985ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த சிறை என்ற படத்தில் “ராசாத்தி ரோசாப் பூவே” என்ற பாடலை எழுதியதன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இளையராஜா இசையில் இவர் எழுதிய “மீனம்மா, மீனம்மா”  என்ற பாடல் மூலம் இவரது புகழ் பன்மடங்கு பெருகியது. தமிழ்நாட்டில் இன்றும் அனைத்து திருமண வீடுகளிலும் ஒலிக்கும் “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும், பொண்ணும்தான்” என்ற திருமண வாழ்த்துப்பாடலை இவர்தான் எழுதியுள்ளார்.




விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ஆட்டமா? தேரோட்டமோ? என்ற பாடலையும், ஒரு தலை காதலர்களின் கீதமாகவும், காதல் தோல்வியடைந்தவர்களின் விருப்ப பாடலாகவும் விளங்கும் இதயம் படத்தில் இடம்பெற்றுள்ள “இதயமே…. இதயமே” என்ற பாடல், இன்றும் கேட்கும்போதே மனதை வருடும் “என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி”, “நடந்தால் இரண்டடி” “வெத்தல போட்ட சோக்குல” என்ற பல வெற்றிப்பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அளித்துள்ளார்.


விருப்ப பாடலாசிரியர்கள் :


பொதுவாக ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஆஸ்தான பாடலாசிரியாக ஒருவர் விளங்குவர். ஆனால், பிறைசூடன் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கிய அனைவருக்கும் விருப்பமான பாடலாசிரியராக விளங்கினார். இளையராஜாவின் பல வெற்றிப்பாடல்களை பிறைசூடன் எழுதியிருந்தாலும் தேனிசைத் தென்றல் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை 1990 காலகட்டங்களில் எழுதினார். இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் 1400க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியுள்ளார். 




மூன்று தலைமுறைக்கும் பாடல் :


எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் திரையுலகை ஆட்சி செய்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடலாசிரியராக அறிமுகமான பிறைசூடன், தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத தனி இசை ராஜ்ஜியம் இளையராஜா இசையிலும், இசையில் புதுமையை புகுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடல் எழுதியுள்ளார். மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்த பாடலாசிரியர் என்ற அரிய பெருமையை பெற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பாடலாசிரியர்களில் பிறைசூடனும் ஒருவர்.






விருதுகள்:




1991ல் இளையராஜா இசையில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற சோலப் பசுங்கிளியே என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளார். தேவா இசையில் தாயகம் படத்தில் எழுதிய பாடல்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை இரண்டாம் முறையாக பெற்றார். 2010ம் ஆண்டும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார். பாடலாசிரியராக மட்டுமின்றி பிறைசூடன் தமிழ் திரையுலகின் சிறந்த எழுத்தாளராகவும் வலம் வந்தார். மேலும் தனது மகன் கவின்சிவா இசையமைத்த ஜெயிக்குற குதிரை என்ற படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார்.