கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்துள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியின்போது தனியார் பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன் என்பவரின் கைகடிகாரத்தை பள்ளி மாணவி ஒருவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன், அந்த மாணவியையும் அவரது உடற்பயிற்சி ஆசிரியரையும் தகாத வார்த்தைகளை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவி உடற்பயிற்சி ஆசிரியரின் கைகடிகாரம் கீழே இருந்ததாகவும், அதனை தான் எடுத்து வந்து கொடுக்க வந்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும் ஆசிரியர் கைகடிகாரத்தை மாணவி திருடியதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பள்ளியை சேர்ந்த பயிற்சியாளர், தியாகராஜனுக்கு புதிய கைகடிகாரத்தை வாங்கிகொடுத்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தியாகராஜன் பயிற்சியாளரை கடுமையாக திட்டியுள்ளார். மேலும் பேருந்துக்காக நின்றிருந்த மாணவியை சமராரியாக தாக்கினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பள்ளி மாணவியை சாலையில் வைத்து உடற்பயிற்சி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.