1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


குடியரசு தினவிழா கொண்டாட்டம்:


இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்தப் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடி மீது மலர்தூவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தமிழ்நாடு காவல்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


வெள்ளை நிற உடையில் திருவள்ளுவர்:


இதன்பின்னர் அண்ணா, கோட்டை அமீர், முதலமைச்சர் சிறப்பு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


 இதனை அடுத்து, பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் நடனம் ஆடினர். அப்போது,  வெள்ளை நிற உடையுடன் திருவள்ளுவர் படம் காண்பிக்கப்பட்டது. இதற்கு மேடையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரிக்கவும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் முகம் சட்டென மாறியது.  இதன்பிறகு, பாரதியார் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து, முதலில் வந்த அலங்கார ஊர்தியிலும் திருவள்ளுர் ஊர்தி வந்தடைந்தது. அதில், 'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு' என்று திருக்குறள் இடம்பெற்றிருந்தது. 


சட்டென மாறிய ஆளுநர் ரவி முகம்:


முன்னதாக, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அளுநர் ஆர்.என்.ரவி காவி உடை அணிவிக்கப்பட்ட படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ”ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை  செலுத்துகிறேன்" என்று கூறியிருந்தார் ஆளுநர். என்.ரவி. 



ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த நிலையில், இன்று குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் முதல் பாடலிலேயே வெள்ளை நிற உடை அணிந்த  திருவள்ளுவர் புகைப்படம் காண்பிக்கப்பட்டதற்கு, ஆளுநர் முகம் மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Republic Day 2024: 75வது குடியரசு தின விழா.. சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!


Padma Awards 2024:விஜயகாந்த், வைஜெயந்தி மாலா, சிரஞ்சீவி உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்..முழு பட்டியல் இங்கே..