தே.மு.தி.க.வின் தலைவரும், எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவருமாகவும் பொறுப்பு வகித்தவர் நடிகர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உயிரிழந்தார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.


விஜயகாந்திற்கு பத்மபூஷன்:


அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உட்பட ஒட்டுமொத்த திரையுலகமே கண்ணீருடன் நேரில் அஞ்சலி செலுத்தினர். மக்களால் அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்படும் அவரை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு நேற்று அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.


மத்திய அரசின் இந்த விருது தமிழக மக்களுக்கும், விஜயகாந்தின் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலைத்துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக அவருக்கு மத்திய அரசு இந்த விருதை வழங்கியுள்ளது. நாட்டின் மிக உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.


தொண்டர்கள் மகிழ்ச்சி:


மத்திய அரசு இந்தாண்டு பத்ம பூஷன் விருதுகளை விஜயகாந்த் மட்டுமின்றி ஆசியாவிலே முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியான 96 வயது பாத்திமா பீவி, ஊடகவியாலாளர் ஹோர்முஷ்ஜி, வங்காள மற்றும் இந்தி படங்களின் பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பிரபல தொழிலதிபர் சீதாராம் ஜிண்டால், பாக்ஸ்கான் நிறுவன சி.இ.ஓ. யங் லியூ, மருத்துவர் அஸ்வின் மேத்தா, முன்னாள் மத்திய அமைச்சர் சத்யப்ரதா முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக், மருத்துவர் தேஜஸ் மதுசூதன் படேல், முன்னாள் மத்திய அமைச்சர் ஒலஞ்சேரி ராஜகோபால், மராத்தி திரைப்பட இயக்குனர் ராஜ்தத், புத்த மத தலைவர் டோக்டான் ரின்போச், இந்தி பட இசையமைப்பாளர் பியாரேலால் சர்மா, மருத்துவர் சந்திரேஷ்வர் தாக்கூர், பிரபல பாடகி உஷா உதுப், பத்திரகையாளர் குந்தன் வியாஸ் ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும், அவர் அந்த விருதுக்கு மிகத்தகுதியானவர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு, நடிகர் சங்க கடனை அடைத்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.


தொடரும் தொண்டர்கள் அஞ்சலி:


விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திலே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது வரை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க: Padma Awards 2024:விஜயகாந்த், வைஜெயந்தி மாலா, சிரஞ்சீவி உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்..முழு பட்டியல் இங்கே..


மேலும் படிக்க: Republic Day: இன்று 75வது குடியரசு தினம்! டெல்லியில் தேசிய கொடியேற்றுகிறார் குடியரசுத் தலைவர்