தொழில்நுட்ப மயமாக்கப்பட்ட உலகில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல எரிபொருளின் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது . சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் உயர்ந்து 104.90 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 53 காசுகள் அதிகரித்து 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் சில அடிப்படை உரிமைகள் குறித்து பார்க்கலாம்.


 





பெட்ரோலின் தரத்தை அறியும் உரிமை :


பெட்ரோலின் தரத்தினை அறிந்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் பெட்ரோல் பங்குகளில் உள்ள ஊழியரிடம் பெட்ரோலின் தரத்தை அறிய விரும்புவதாக கூறினால் அவர் அங்கிருக்கும் ஃபில்டர் பேப்பரை பயன்படுத்தி அதனை செய்துக்காட்டுவார். அதன் நிறம் மாறினால் பெட்ரோலின் தரத்தில் குறைபாடு உள்ளதாக அர்த்தம். அதேபோல கண்ணாடி கிளாஸ் ஒன்றினை பயன்படுத்தி பெட்ரோலின் அடர்த்தியையும் சோதனை செய்துக்கொள்ளலாம். பெட்ரோலின் தரத்தில் சந்தேகம் இருப்பின் அங்கிருக்கும் மேலாளரிடம் புகார் செய்ய உரிமை உண்டு.



பெட்ரோல் விலை : 


தினசரி மாறுபடும் பெட்ரோலின் விலையை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பங்குகளில் இடம்பெற செய்ய வேண்டும் . அவ்வாறு பெட்ரோல் விலை இல்லாவிட்டால் அதனை வைக்க சொல்லும் உரிமையும் வாடிக்கையாளர்களுக்கு உண்டு.


இலவச காற்று :


வாகனங்களின் டயர்களில் ஏற்றப்படும் காற்றிற்கு வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்க தேவையில்லை. காற்றினை டயர்களில் ஏற்றித்தரும் பணியாளர்கள் அதற்காக பணத்தை வாங்கக்கூடாது என்பதுதான் சட்டம். ஆனால் அதையும் மீறி  வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணம் சேவையின் அடிப்படையிலானதே தவிர காற்றிற்கான கட்டணம் கிடையாது.




இலவச குடிநீர்:


ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும்  குடிநீர் வசதி அவசயமானது. அது அங்கிருக்கும் ஊழியர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். 



இலவச கழிவறை :



ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் சுத்தமாக பராமாரிக்கப்படும் கழிவறைகள் இடம்பெற வேண்டியது அவசியம் . அந்த கழிவறையை பயன்படுத்த பொதுமக்களுக்கு உரிமை உண்டு.


முதலுதவி வசதி :


பொதுவாக அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும் முதலுதவி பெட்டி அவசியமானது. அதே போலத்தான் பெட்ரோல் பங்கிலும் முதலுதவி பெட்டியை வைப்பது அவசியமாகிறது. அந்த முதலுதவி பெட்டியில் விபத்து நேரிடும் பொழுது தேவையான அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இடம்பெற வேண்டியது அவசியம்.


அதே போல  வாடிக்கையாளர்களும் பெட்ரோல் பங்குகளில் மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் , புகைப்பிடிக்க கூடாது, தீப்பொறிகளை ஏற்படுத்து சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்பதும் முக்கியமான ஒன்று . அதனையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.