ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர். தென் தமிழகத்தின் ஒரு சாதாரணமான பின்னணியில் பிறந்து வளர்ந்தவர் முதல்வர் பதவியில் அமர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.


தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை கிராமத்தில் 1951-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி பிறந்தார் பேச்சிமுத்து என்கிற பன்னீர்செல்வம். திருவில்லிப்புத்தூரை பூர்வீகமாகக்கொண்ட இவரின் பெற்றோர் ஓட்டக்காரத்தேவர் - பழனியம்மாள். அங்குள்ள தங்களின் குலதெய்வமான பேச்சியம்மன் நினைவாக இவருக்கு பேச்சிமுத்து எனப் பெயரிட்டு அழைத்தனர். பின்னாளில் அதை பன்னீர்செல்வம் என மாற்றிக்கொண்டார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்தார். அண்மையில் தான் அவர் தவறினார். கவிதா பானு என்ற மகளும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என இரு மகன்களும் உள்ளனர். 




தந்தை ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், பிஏ பொருளாதார படிப்பிற்குப் பின்னர் தானும் அதே தொழிலில் ஈடுபட்டார். விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், உத்தமபாளையம் கல்லூரியிலும் பயின்றார். பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே அவருக்கு எம்ஜிஆர் மீது பெரிய ஈர்ப்பு உண்டு. அதனாலேயே எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தவுடனேயே அதிமுக உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 




1982ல் தான் அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. பெரியகுளம் நகர இளைஞரணித் தலைவர். அத்தான் அவருடைய முதல் பதவி. அதன்பின்னர் ஜெ அணி, ஜானகி அணி அதிமுக இரண்டாகப் பிரிய ஜானகி அணியில் இருந்தார். அப்படி, இப்படி என சில பதவிகள். 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 1996 ஆம் ஆண்டு பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவி. அந்தப் பதவி அவரை அதிமுகவில் அடுத்தக்கட்டத்திற்கு உயர்த்தியது. 2000 ஆம் ஆண்டில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர். அடுத்த ஆண்டே, 2001ல் சட்டப்பேரவைத் தேர்தல் வர பெரியகுளத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 20 ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் அறிந்த முகம், பெரிய பிரச்சினைகள் சர்ச்சைகள் இல்லை என்பதால் வேட்பாளராக ஜெயலிதா இவரை டிக் செய்தார்.


முதன்முறை எம்.எல்.ஏ. பதவியே அமைச்சர் பதவியையும் கொடுத்தது. ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது வழக்கம். அப்படி ஜெ.வின் பார்வை பட்டு பொதுப்பணித் துறை அமைச்சரானார்.




அமைச்சர் பதவி மட்டுமல்ல ராஜயோகமும் இருந்ததுபோல என்று சொல்லும் அளவுக்கு எதிர்பாராமல் முதல்வர் பதவியும் அவருக்கு வந்தது. 2001-ல் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்க, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். 2001, செப்.21 முதல் 2002 மார்ச் 1 வரை 7 மாதங்களுக்கு தமிழக முதல்வராகப் பணியாற்றும் வாய்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்தது.


ஆனால் அடுத்து நடந்த தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. ஓபிஎஸ் வெற்றி பெற்றார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரானார். 





ஹேட்ரிக் வெற்றியாக, 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால் இந்தமுறை போடி தொகுதியில் நின்று வென்றார். முதல்முறை பொதுப்பணி, இரண்டாவது முறை நிதித்துறை.  2014ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தது. அதற்குள் ஜெயலலிதா, சசிகலா இருவரின் நம்பிக்கைக்குரியவராக ஓபிஎஸ் மாறியிருந்தார். 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதால் 2014, செப்.29 முதல் 2015 மே 22 வரை முதல்வராக இருந்தார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் ஜெயலலிதா மறைந்தார். அப்போதும் ஓபிஎஸ் முதல்வரானார்.




ஓபிஎஸ்ஸின் பெரியகுளம் டூ புனித ஜார்ஜ் கோட்டை பயணம் இப்படித்தான் ராக்கெட் வேகத்தில் சென்றது. அதிமுகவில் மீண்டும் பிளவு எட்டிப்பார்க்கும் வரை. ஒரு தர்ம யுத்தத்தைத் தொடங்கினார். சசிகலா, டிடிவி தினகரன் மீது அடுக்கடுக்காகப் புகார்களை வைத்தார். அதனாலேயே, சசிகலா சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார். அதன்பின்னர் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என ஆட்சி ஊசலாட்டம் போட, இறுதியாக ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபித்தார். இதற்கிடையில் மீண்டும் ஈபிஎஸ் ஓபிஎஸ் இணைப்பு நடந்தது. இரு கைகள் இணைந்தன. இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண