மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தங்கமாபுரிபட்டிணம் நகராட்சி துவக்கப் பள்ளி, தூக்கணாம்பட்டி நகராட்சி துவக்கப் பள்ளி மற்றும் மேட்டூர் டவுன் பகுதியில் உள்ள பாப்பம்மாள் திருமண மண்டபம் போன்ற தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் உதவி தேவைப்படுபவர்களுக்கான தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சார் ஆட்சியர், மேட்டூர் - 9445000435
வட்டாட்சியர், மேட்டூர் - 9445000552
வருவாய் ஆய்வாளர், மேட்டூர் - 8072080773
நகராட்சி ஆணையாளர், மேட்டூர் - 7397396269
காவல் துணை கண்காணிப்பாளர், மேட்டூர் - 9498104763
காவல் ஆய்வாளார். மேட்டூர் - 9498104757
பி.என்.பட்டி கிராம நிர்வாக அலுவலர் - 8760275595
நவப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் - 8870554799
காவல் ஆய்வாளர், கருமலைக்கூடல் - 9443848134
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1,57,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2,10,000 கன அடியில் இருந்து வினாடிக்கு 1,80,000 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120.05 அடியில் உள்ள நிலையில், அணையின் நீர் வரத்து 2,00,000 கன அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வரும் 2 இலட்சம் கன அடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சுமார் 2.50 இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால், அணைக்கு வரும் நீரானது முழுமையாக உபரி நீராக வெளியேற்றப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்படும் என வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் 16 கண் மதகுகள் அருகிலுள்ள புதிய பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்படுகிறது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் காற்றாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்