1,500 அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,500 வழங்க வகை செய்யும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022- 2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு அரசின் 10-ஆம் வகுப்புத் தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.
2022- 2023ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் (CBSE / ICSE உட்பட) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள், 01.10.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்விற்கே மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 09.09.2022.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்