சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நீர்நிலைகள், குளிர்ச்சியான இடங்களைத் தேடி மக்கள் படையெடுத்து வருகின்றனர். இன்னும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்காத நிலையில், வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அவசியமின்றி பகலில் வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், நீர் ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிகேணி, தி.நகர், மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, கிண்டி, எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, கோடம்பாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான நிலை நிலவுகிறதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் அதனை சுற்றியுள்ள இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.
முன்னதாக தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை (மே 2) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.