தமிழகத்தில் நாளை முதல்  தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் நேற்று இரவு 9 மணி வரையிலும் அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை அனைத்து கடைகளும் திறப்பதற்கு தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.




இதன்படி நாளை (24.05.2021) முதல் (30.05.2021) வரை தமிழகத்தில் பால், தண்ணீர், செய்தித்தாள்கள் மற்றும் உணவகங்கள் (பார்சல் சேவை மட்டும்) இவற்றைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக என்று அதிகாலை முதலே அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் சந்தைகள் குவிந்து வருகின்றனர். சேலத்தில் கொரோனா மற்றும் கறுப்பு பூஞ்சை பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது இதன் காரணமாக கடந்த வாரம் சேலத்தில் செயல்படும் அனைத்து சந்தைகளை முழுமையாக அடைப்பதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அமைச்சரின் உத்தரவை அடுத்து சேலத்தில் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டன.




இருப்பினும் மக்களின் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று தமிழக முதல்வர் மருத்துவ குழுவோடு ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் இரண்டு வாரம் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டது.
மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஒரு வாரம் முழு ஊரடங்குக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டார். ஒரு வாரம் ஊரடங்கு என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது  நாளை முதல் அனைத்து கடைகளும் மூடப்படுவதால் இன்று காலை முதலே மக்களின் நடமாட்டம் சந்தைகளில் அதிகரித்து காணப்பட்டது. 




கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரும், மாநகராட்சி பணியாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மக்கள் சமூக இடைவெளி இன்றி பொருட்களை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சிலர் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவது வேதனை அளிப்பதாகவே உள்ளது.


சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நேற்றுவரை தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட  நிலையில் இன்று மூன்று மடங்கு உயர்ந்து கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் காய்கறிகள் அனைத்தும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் மக்கள் வாங்கிச் சென்று வருகின்றனர். மாவட்டம்தோறும் தோட்டக்கலை துறையை கொண்டு வாகனம் மூலம் காய்கறிகளை வீடு வீடாக விநியோகம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


காய்கறிகளின் விலை பட்டியல்
தக்காளி - 30ரூ
பெரியவெங்காயம் - 25 ரூ
சின்ன வெங்காயம் - 70ரூ
கருவேப்பிலை - 100ரூ (கிலோ)
கொத்தமல்லி - 60ரூ (கட்டு)
கேரட் - 80ரூ
பீன்ஸ் - 120ரூ
கோஸ் - 45ரூ
வெண்டைக்காய் - 60ரூ
கத்தரிக்காய் - 50ரூ
முருங்கைக்காய் - 10ரூ
உருளைக்கிழங்கு - 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றது. 


கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில், மக்கள் சமூக இடைவேளை இன்றி பொருட்களை வாங்க நிற்பதால் நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.