தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,873 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆயிரத்து 559 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 671-ஆக பதிவாகியுள்ளது.


கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுபடுத்த நாளை முதல் ஒரு வாரத்திற்கு எவ்விதத் தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும். நேற்றும், இன்றும் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை கூறியுள்ளது.


அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனமான ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் ஆகியவை, வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு, அடுத்த 18 மாதங்களுக்குள்  200 கோடி டோஸ் தடுப்பூசிகள் விநியோகம் செய்ய முன்வந்துள்ளன




தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மாநில/ யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், மாநில தேர்வு வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் காணொலி வாயிலாக இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மத்திய மகளிர் மற்றும் குழந்தை நல அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.




கடந்த 24 மணிநேரத்தில் 3,57,630 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து 9-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 87.76% ஐ எட்டியுள்ளது.


வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான யாஸ் புயல், வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே மே 26 அன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, இந்திய கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தயாராகி வருகின்றனர்.


நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட்-19-க்கான  தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்  துறை அமைச்சர்  சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.