தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பை கண்டு கவலையடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டிவேய்ன் பிராவோ, தமிழக மக்களுக்காக ஒரு காணொளியை பேசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். "தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீள மாநில அரசின் விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தமிழில் பதிவிட்டு அதன் கீழே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் கணக்கை பிராவோ டாக் செய்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டியுள்ள காணொளியில் "நீங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள், உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள், உங்கள் அன்பிற்குரியவரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள், குடும்பத்தையும், நட்பையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க பாருங்கள். எப்போதும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுங்கள். இது ஒரு சோதனை நேரம், நம்பிகையை கைவிட்டுவிடாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரின் காணொளியில் "கவனமாக இருப்போம், தெம்புடன் நடப்போம், நம்பிக்கையாக கடப்போம். நாம் அனைவரும் சாம்பியன். உங்களுக்கான வாய்ப்பு வரும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள், இதில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். சாம்பியன்" என்று அவரின் ஃபேவரைட் வார்த்தையான சாம்பியனுடன் தனது மெசேஜை நிறைவு செய்துள்ளார். டிவேய்ன் பிராவோ 2011-ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்தாண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் பதிவுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீரர்களின் விழிப்புணர்வு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது.
தடுப்பூசிபோடுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட விஷயங்களை ஜடேஜா, புஜாரா, ராயுடு என பல சென்னை வீரர்கள் வலியுறுத்திவரும் நிலையில், தற்போது பிராவோவும் காணொளியை வெளியிட்டுள்ளார்.