வட மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் வர இருக்கிறது . இது குறித்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயில்களில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி புறநகர் ரயில்களில் பயணிப்பதற்கு நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் , சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், உயர்நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் பயணம் செய்வதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளானது நாளை காலை 4 மணிமுதல் மே 20 காலை 4 மணிவரையில் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மேற்க்கண்ட பயணிகள் ரயில் நிலையத்திற்கு வரும் பொழுது மாஸ்க் அணிந்து வர வேண்டும் எனவும், ரயில்கள்களில் ஏறும் பொழுது கூட்டமாக ஏறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ரயிலுக்காக காத்திருக்கும் பொழுது முறையான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் , பயணத்தின் போது முறையான அடையாள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் கட்டுப்பாடுகள் : இதே போல் மெட்ரோ ரயிலில் 50% இருக்கையை மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறியீடு போடப்பட்ட இருக்கைகளை தவிர்த்து மற்ற இருக்கைகளில் பயணிகள் அமர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கான ஞாயிற்று கிழமையை தவிர்த்து மற்ற நாட்களின் உச்ச (பீக்) நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பன்றுதல் உள்ளிட்டவைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை காலை 4 மணிமுதல் மே 20 ஆம் தேதி காலை 4 மணிவரையில் தமிழகத்தில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அவசிய தேவைகள் இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Chennai Sub Urban Trains : சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை..!
ABP NADU | 05 May 2021 05:25 PM (IST)
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் , சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில்கள்