கோவை மாவட்டத்தில் 120 இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறைவான கையிருப்பு இருப்பதால் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன. கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு கலை கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கடந்த ஒருவாரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.

நேற்று தடுப்பூசி போட வந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரி முன்பு தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்த நிலையில், தடுப்பூசி முடிவடைந்தால் பொதுமக்களை போலீசார் கலைந்து செல்ல செய்தனர். இதனால் பல மணி நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.



 

இந்நிலையில் இன்று கோவை அரசு கலைக் கல்லூரியில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி முன்பு கரும்பலகையில் 'இன்று தடுப்பூசி இல்லை' என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ய போது,"தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி மீண்டும் வந்தால் பணிகள் துவக்கப்படும்" என்றனர்.


 

கோவையில் தடுப்பூசி துவங்கிய நாளிலிருந்தே கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து பல மையங்கள் தடுப்பூசி இல்லாமல் பூட்டப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நிலவும் இந்த தட்டுப்பாடு அதிகாரிகள் கவலையடைந்ததாக தெரியவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை வலியுறுத்தியும் கோவை போனற பெருநகரத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக மக்களுக்கு கவலையளித்துள்ளது. 

தொடர்ந்து தடுப்பூசி மீதான சர்சைகளை கடந்து மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த முன்வரும் வேளையில் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தடைபட்டு வருவது மருத்துவர்களையும் கவலையடைச் செய்துள்ளது. 



தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் தொடரும் இந்த அவல நிலையை போக்க மத்திய, மாநில அரசின் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தடுப்பூசி திருவிழா கொண்டாட வேண்டிய சூழலில் வழக்கமான தடுப்பூசி கூட இல்லாமல் மக்கள் திண்டாடி வருவது மத்திய அரசின் செவிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. வினியோகத்தில் சிக்கல்களை தவிர்த்து கோவைக்கு தேவையான தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும். கோவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் இப்பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய , மாநில அரசுகளிடம் கொரோனா தடுப்பூசியை கோவைக்கு பெற்றுத்தரும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.