2 நாட்களுக்குள் நிவாரணம்:


மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து துறை ரீதியாக நிவாரணப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


மாண்டஸ் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 9 பகுதிகளில் 205 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் இது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசிகையில் 


முகாம்களில் தங்க வைத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.  இந்த புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான விவரங்கள் மதியம் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டார். குறிப்பாக எத்தனை மரங்கள் முறிந்துள்ளது, எத்தனை மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது,  உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா மற்றும் எத்தனை படகுகள் சேதம் அடைந்துள்ளது உள்ளடவை கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் மதியத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.




உடனடியாக சீரமைப்பு: 


மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு நாட்களிலேயே நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குடிசைகள் ஏதும் சேதமடைந்திருந்தால் அதனை உடனடியாக சரி செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழக முதலமைச்சர் தொடர்ந்து இந்த நிவாரண பணிகளை குறித்து தகவல் கேட்டறிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பொருத்தவரையில் 11 சென்டிமீட்டர் குள்ளாகவே மழை பதிவாகி இருப்பதால் நீர் நிலைகளில் அதிக தண்ணீர் திறந்து விட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. சேதங்களுக்கு ஏற்றவாறு அந்தந்த துறை ரீதியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மதியத்திற்குள் இயல்பு வாழ்க்கை திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  


சேதாரம் தவிர்ப்பு:


அதேபோல் புயலின் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் அது மீண்டும் சரி செய்யப்பட்டது எனவும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெருமளவு சேதாரம் ஏற்படவில்லை என  அமைச்சர் குறிப்பிட்டார்.