மீண்டும் தொடங்கிய போக்குவரத்து:


மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகப்படியாக இருக்கும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் படி, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக அதியாவசிய போக்குவரத்தான ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது புயல் கரையைக் கடந்து விட்டதால், மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னதாக நேற்று, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவசரப் போக்குவரத்திற்கு (ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்கள் சேவை உள்ளிட்டவை) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பிற போக்குவரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதி மறுக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.


முன்னெச்சரிக்கை:


இதுமட்டுமின்றி, மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ஏற்கனவே பூங்காக்கள், விளையாட்டுப்பூங்காக்களை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கரையைக் கடந்துள்ளது. 


20 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு:


மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன் தின்பம் முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வருகிறது. சென்னையில் மழை விட்டு, விட்டு பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களுக்கு மிதமான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதாலும், அவசர மற்றும் அத்தியாவசிய பேருந்து சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


மாண்டஸ் புயல் காரணமாக ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சென்னைக்கு நீர் வழங்கும் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோர மக்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.