கரையை கடந்த மாண்டஸ்:


இன்று காலை 2.30 மணி அளவில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது, இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக் கடலில் உருவான  புயல் "Mandous" கடந்த 6 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திராவை கடந்தது. 


இது மாமல்லபுரம் (மகாபலிபுரம்) க்கு அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று இரவு 9.30 மற்றும் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புயலாக  அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி கரையை கடந்தது. 


விடாமல் பெய்த கனமழை:


இது கிட்டத்தட்ட மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகல் காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


நேற்று கரையை கடக்கும் போது வட தமிழகம், கடலொர பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சென்னை ஈ.சி.ஆர் முதல் பாண்டிச்சேரி வரை நேற்று இரவு பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 


மக்கள் சிரமம்:


மாண்டஸ் புயல் காரணமாக நேற்று சென்னையில் காலை முதல் பரவலாக மழை பெய்து வந்தது, குறிப்பாக மாலை நேரம் முதல் விடிய விடிய புயல் கரையை கடப்பதன் காரணமாக தொடர் மழை பெய்தது. பட்டிப்பாக்கத்தில் கடல் நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 






சூறைக்காற்று வீசப்பட்டதால் ஆங்காங்கே மரம் முறிந்து விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 115 மிமீ, நுங்கம்பாக்கத்தில் 113 மிமீ, புழல் 100 மிமீ, பூந்தமல்லி  99 மிமீ  மழையும் பதிவாகியுள்ளது. 






புயல் கரையை கடந்தாலும் இன்றூம் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் வரும் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்


காற்றழுத்த தாழ்வு நிலை


மாண்டஸ் புயலின் காரணமாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.


மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது, இது நாளை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று அடுத்த 3 மணிநேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.