கரூரில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 




தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


 




தமிழகத்தில் 12,340 ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்களாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் வாழ்வாதாரத்தை இழந்து இந்த பகுதி நேர ஆசிரியர் பணி செய்து வருகின்றனர். கடந்த தேர்தல் வாக்குறுதி 181ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக நிரந்தர பணியாளர்களாக பணிய அமர்த்துவோம் என கூறியிருந்தார். 


 





தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே தமிழக முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருவதாக பகுதி நேர ஆசிரியர்கள் கூறினர்.