சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும் , மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஏகனாபுரம் கிராம மக்கள் 80  நாட்களுக்கு மேலாக தொடர்ந்து, தினமும் மாலை நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில்  விவசாய வேலைகளை செய்து முடித்துவிட்டு, விமான நிலையம் வேண்டாம் என கூறி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


கோட்டையை நோக்கிப் பேரணி



இந்நிலையில் சட்டமன்ற அலுவலகத்தை நோக்கி வருகின்ற 17ஆம் தேதி பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடைபயண போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, மாவட்ட போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.



தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை


இதனைத் தொடர்ந்து இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் , எ.வ.வேலு ஆகியோர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் பொழுது, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, க.சரவணன்,ப.இரவிச்சந்திரன், து.கதிரேசன், செ.கருணாகரன், ச.கணபதி, சுப்பிரமணியன், வெ.முனுசாமி, லோ.இளங்கோஆகிய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 2400 மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. எங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் கம்பக்கால்வாய் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தக்கூடிய பகுதியில் உள்ளது. எங்கள் கிராமமே ஒரு சமத்துவபுரமாக உள்ளது. எங்கள் கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான வழியினை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.


உறுதி - போராட்டம் கைவிடப்பட்டது


தமிழ்நாடு முதலமைச்சர் , ஒருவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்காகத்தான் வாழ்வாதாரத்திற்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும், சந்தை மதிப்பிற்கு 3.5 மடங்கு இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள் என தெரிவித்ததோடு, கிராம மக்களின் கோரிக்கையை,  முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள், 17.10.2022 அன்று அவர்களுடைய கோரிக்கையினை வலியுறுத்தி, மேற்கொள்ள இருந்த நடைபயணத்தை கைவிடுவதாக உறுதியளித்தனர்.



இந்த பேச்சுவார்த்தையில்‌, எஸ்‌.கிருஷ்ணன்‌, அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌, தொழில்துறை, ஜெயஸ்ரீ முரளிதரன்‌., தமிழ்நாடு தொழில்‌ வளர்ச்சிக்கமக மேலாண்மை இயக்குநர்‌, மா.ஆர்த்தி காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சியர்‌, டாக்டர்‌.சுதாகர்‌, காஞ்சிபுரம்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌, ஜி.சிவருத்ரய்யா காஞ்சிபுரம்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌, .புவனேஷ்வரி, பொது மேலாளர்‌, தமிழ்நாடு தொழில்‌ வளர்ச்சி கழகம்‌ ஆகியோர்‌ பங்கு பெற்றனர்‌.


இரவு நேர போராட்டம் தொடரும்


தினமும் மாலை மற்றும் இரவு வேலைகளில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்ப போராட்டம் தொடருமா? என  போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இரவு நேர போராட்டம் ஆனது தொடரும் என தெரிவித்தனர். அரசு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டம் மட்டுமே வாபஸ் பெறப்பட்டதாக கூறினர்.