முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரத் திருவிழா. கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி உத்திர திருவிழா 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திர திருவிழாவிற்காக பக்தர் பலரும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள காவரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன்- வள்ளி, தெய்வானை திருமண நிகழ்ச்சி மலை அடிவாரத்தில் நடைபெற்றது.
முன்னதாக முருகன்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த வெள்ளித்தேரில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகக்கடவுள் கிரி வீதியில் வலம் வந்தார்.
இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவுள்ளது. தேரோட்டத்தில் கலந்து கொள்ள தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனிக்கு வர துவங்கியுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.