முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் பத்மஸ்ரீ டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டை போற்றும் வகையில் சிலையை திறந்து வைக்கிறார். 


டி.எம்.எஸ். சிலை:


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதாவது ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் என மொத்தம் இரண்டு நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி மாலை தலைநகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த பாடகர் பத்மஸ்ரீ டி.எம் சௌந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் இன்று இரவு மதுரையிலேயே தங்குகிறார். 


அதன் பின்னர் நாளை காலை 10 மணி அளவில் கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறார். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட தலைநகர் வரை சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. சுமார் மதியம் 1 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் தங்கும் விடுதியில் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை சுமார் 4 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதியில் நடைபெறும் தென்மண்டல அளவிலான திராவிட முன்னேற்ற கழக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.


ராமேஸ்வரத்தில் முதல்வர்:


வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தினை முடித்த பின்னர், ராமேஸ்வரம் சென்று அங்கு இரவு தங்குகிறார். அதன் பின்னர் நாளை மறுநாள் காலை சுமார் 10 மணி அளவில் ராமேஸ்வரம் மண்டபம் கலோனியல் பங்களா பகுதியில் நடைபெறும் ராமேஸ்வரம் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, மீனவ்ர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி, மதுரை, ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 


பத்மஸ்ரீ டி.எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு 


தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகரான பத்மஸ்ரீ டி.எம். சௌந்தரராஜன் கடந்த 1922ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி மதுரையில்  பிறந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 1946ஆம் ஆண்டு திரையுலக வாழ்க்கையைத் துவங்கிய டி.எம். சௌந்தரராஜன் 2007ஆம் ஆண்டு வரை பாடகர் மற்றும் நடிகர் என தனது திரையுலக வாழ்க்கையில் திகழ்ந்தார்.


கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் வரை திரையுலகில் இருந்த இவருக்கு கலைமாமணி மற்றும் பத்மஸ்ரீ போன்ற உயரிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ’செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலில், மற்ற இளம் பாடகர்களுடன் இணைந்து பாடியிருந்தார். அதுவே அவர் பாடிய கடைசி பாடல் என கூறப்படுகிறது. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 25 தேதி வயது மூப்பு காரணமாக மறைந்தார்.