திமுக இளைஞரணி நிர்வாகி
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (27). திமுகவில் இளைஞர் அணி நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் எச்சூர் பகுதியில் செயல்படும் தனியார் ஆலைகளில் ஸ்கிராப் எடுப்பது, கட்டுமான பணி மேற்கொள்வது, போன்ற பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். ஆல்பர்ட் மீது ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்து அடிதடி கொலை முயற்சி வழக்கு என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அண்மையில் அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் ஆலை ஒன்றில் கட்டுமான பணி ஒப்பந்தம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரில் ஆல்பர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பிணையில் வெளிவந்தனர்.
வெடிகுண்டு வீசி..
இந்த நிலையில் ஆல்பர்ட் கடந்த 5-ஆம் தேதியன்று மாலை ஒப்பந்தம் எடுத்த தனியார் ஆலையில் தனது நண்பர்களுடன் நின்றிருந்தார். அப்போது நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் ஆல்பர்ட் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது, இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஆல்பர்ட் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினார். அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்ற மர்ம கும்பல் ஆல்பர்ட்டை வழிமறித்து கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.
காவல் நிலையத்தில் வைத்து விசாரணை
இதில் படுகாயம் அடைந்த ஆல்பர்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆல்பர்ட் கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி சந்திரதாசன் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (21), குரோம்பேட்டையைச் சேர்ந்த பிரணவ் (20), மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகிய மூன்று பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் சரணடைந்தனர்.
அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ததில் இந்த கொலையில் 21 நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சரணடைந்த மூன்று பேர் தவிர 14 பேர் கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தொழில் போட்டியும், கூலிப்படையும்
விசாரணையில் முடிவில் , அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் , ஆல்பர்ட்டிற்கும் முன்பகை இருந்தது வந்துள்ளது. இதேபோன்று தாம்பரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற தொழிலதிபருக்கும், ஆல்பர்டிற்கும் , தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதையடுத்து சுரேஷ், செந்தில்குமார், மதுரையை சேர்ந்த சுந்தர், ஆனந்த வினோத், எச்சூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் தினேஷ் ,சந்துரு, தாம்பரம் பகுதியை சேர்ந்த மாதவன், சபரிசன் வயது, அரவிந்த், அஸ்வின் மற்றும் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ள நிலையில் மேலும் 14 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொழில் போட்டியில் கூலிப்படை ஏவி தி.மு.க.பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது