மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு (Vijayakanth) நேற்று பத்மபூஷண் விருது (Padma Bhushan Award) வழங்கப்பட்ட நிலையில், அவரது நினைவிடத்துக்கு பத்மபூஷண் விருது கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
விஜயகாந்தின் மறைவு
சினிமா ரசிகர்களால் பாசக்கார கேப்டன் மற்றும் தனித்துவமான நடிகராகவும், தேமுதிக கட்சி நிறுவனர், எதிர்க்கட்சித் தலைவர் என பிரபல அரசியல் தலைவராகவும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தனது 71 வயதில் காலமானார். கர்ஜிக்கும் குரலுடன் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்களை சென்ற ஆண்டு இறுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவரது உடல், சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் சமாதி கோயிலாக மாற்றப்படும் என அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா உறுதி அளித்த நிலையில், ஏராளமான மக்கள் தொடர்ந்து இங்கு வழிபட, அன்னதானம் உள்ளிட்ட விஜயகாந்தின் சேவைப் பணிகள் இங்கு தொடர்ந்து வருகின்றன.
பத்மபூஷண் விருது
இந்நிலையில், முன்னதாக மறைந்த விஜயகாந்தின் பணிகளைப் பாராட்டி அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று டெல்லியில் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்ட நிலையில் பிரேமலதா விஜயகாந்த் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக துணை பொதுச்செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். மறைந்த விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது அவரது ஏராளமான ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு உணர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்தது.
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது
இந்நிலையில், சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதினை வைத்து பிரேமலதா அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா, “விஜயகாந்துக்கு காலம் தாழ்ந்து கிடைத்தாலும் விருதினை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. நேற்று மாலை டெல்லி தமிழ்ச்சங்கம் சார்பாக கேப்டனுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அத்தனை பேரும் வந்து உணவருந்தினார்கள்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருது குறித்து மத்திய அரசிதழில் வரலாற்றுப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.