West Nile Fever: வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..

கேரளா மாநிலத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இது தொடர்பான அறிக்கையில், “வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவும் நோயாகும். இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால் இது ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரிடையாக பரவுவதில்லை இந்த வைரஸ் உகண்டா நாட்டில் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

நோய் அறிகுறிகள்:

வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80 சதவிகித மனிதர்களுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும். ஒரு சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் மற்றும் மூளை காய்ச்சல் (Encephalitis) ஏற்படும்.

இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கும். எனினும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு எளிதாக ஏற்படும். இந்நோய் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இந்நோய் கண்டறியப்பட்டது.

வெஸ்ட் நைல் வைரஸ் நோய் அறிகுறிகள் இருப்பின் குறிப்பாக மூளை காய்ச்சல் (Encephalitis) போன்ற பாதிப்புகள் உடையவர்களை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். இந்நோய் "எலைசா * (Elisa) மற்றும் "ஆர்டி பிசிஆர்" (RTPCR) பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். நோய் தொற்று சந்தேகப்படும் நபர்களிடமிருந்து பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையம் பூனேயில் (NIV-PUNE) பரிசோதனை செய்ய வசதி உள்ளது.

இந்த காய்ச்சல் பரவினால் பொது மக்கள் பீதியடைய வேண்டியதில்லை. காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.  வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நீர் தேங்காமல் இருத்தல் வேண்டும். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்று இதற்கு தடுப்பு ஊசிகள் இல்லை.

எனவே உடனடி சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிய வேண்டும். கொசுவலை, கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும், சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு எண் 104 ஐ தொடர்பு கொள்ளவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement