தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை:


தொடர் கனமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வரும் 13 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)


பென்னாகரம் (தருமபுரி மாவட்டம்) 10, ஒகேனக்கல் (தருமபுரி மாவட்டம்) 8, சமயபுரம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) 7, உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்), முசிறி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) தலா 6, அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்), மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்), கல்லந்திரி (மதுரை மாவட்டம்), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்), புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்), அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்), ) தலா 5, ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்), பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்), புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) தலா 4, திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்), கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்), திருவாடானை (இராமநாதபுரம் மாவட்டம்), கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்), குப்பணம்பட்டி (மதுரை மாவட்டம்), பெரியபட்டி (மதுரை மாவட்டம்), ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்), சிவலோகம் சித்தர் II (கோட்டம் கன்னியாகுமரி) ), சூரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்), கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) தலா 3 செ. மீ மழை பதிவாகியுள்ளது.


அக்னி நட்சத்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 43 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. ஆனால் தற்போது உஷ்ணத்தை தணிக்கும் வகையில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்கியடைந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அடுத்த வாரம் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.