தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக உளவுத்துறைக்கு என கூடுதலாக ஒரு கண்காணிப்பாளரை (எஸ்.எஸ்.பி)-யை தமிழக அரசு நியமித்து உள்ளது. நெல்லை காவல்துறை  உளவுத்துறை கூடுதல் எஸ்.எஸ்.பி.யாக அர்ஜுன் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போது புதிதாக ஆட்சிக்கு வருபவர்களுக்கு தங்களுக்கு சாதகமான மேல்மட்ட அதிகாரிகளை நியமிப்பது, பணியிட மாறுதல் வழங்குவது, தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை உயர் பதவியில் அமர்த்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் விதிவிலக்கு அல்ல. தலைமைச் செயலாளர் தொடங்கி பல்வேறு துறை செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் என பலர் மாற்றப்பட்டு உள்ளனர்.


அதே போல், காவல் துறையில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் உளவுத்துறையிலும் பல்வேறு மாற்றங்களை புதிய திமுக அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள், எஸ்.எஸ்.எஸ்.பி.யாக அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் உள்ளனர்.


தற்போது வரை ஐ.ஜி பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில், தான் உளவுத்துறை வரலாற்றில் முதல் முறையாக மேலும் ஒரு எஸ்.எஸ்.பியை தமிழ்நாடு அரசு நியமித்து உள்ளது. சென்னை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.எஸ்.பியாக இருந்த அர்ஜுன் சரவணன் தான் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் எஸ்.எஸ்.எஸ்.பி. ஆவார்.


இவர் 2020 ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்தபோது பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஓடோடி சென்று தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தார். நெல்லையில் ரவுடிகள், குற்றவாளிகளை ஒடுக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நெல்லையில் இவர் கொண்டு வந்த ‘மக்களைத் தேடி மாநகர காவல்துறை’, சிசிடிவி கேமிராக்களின் அவசியத்தை வலியுறுத்தும்‘நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை’, முதியவர்களுக்கான ‘வேர்களைத் தேடி’, திருநங்கைகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.




அதே போல், கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர், ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே சென்று கொடுக்கும் பணியை தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மேற்கொண்டார். ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டு வந்த அர்ஜுன் சரவணன் அதில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதுடன் சட்ட ஆலோசனைகளை வழங்கி வந்தார். மேலும், தனது கருதுக்களையும் துணிச்சலாக பதிவு செய்து வருகிறார்.


இவரது செயல்பாட்டை அறிந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளது. சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் தங்களின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் எனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்!” என பாராட்டு பெற்றார். தற்போது அவர் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டிருப்பது பலரது வரவேற்பை பெற்று இருக்கிறது.


உளவுத்துறையில் உயர் அதிகாரிகள் பலர் இருந்தாலும் அர்ஜுன் சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.பி பதவி சக்திவாய்ந்த ஒன்றாகும். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் உள்ள மொத்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் கீழ்மட்ட அதிகாரிகளிடம் இருந்து எஸ்.எஸ்.பிக்கே போய் சேரும். எஸ்.எஸ்.பி மூலமாகவே உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றடையும் அளிப்பார். இத்தகைய அதிகாரமிக்க இந்த பதவியில் அரவிந்தன் உள்ள நிலையில், உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்.எஸ்.பி பணியிடத்தை அரசு உருவாக்கி அந்தப் பதவியில் அர்ஜுன் சரவணனை நியமித்து உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.