திண்டுக்கல் அருகே தொடர் மழையின் காரணமாக 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பன்னீர்  திராட்சை பழங்கள்  அழுகியதால்   விவசாயிகள் வேதனை. மாடுகளுக்கு திராட்சைப் பழங்களை கொடுக்கும் அவலம். பல லட்சம் டன் திராட்சை அழிந்து  போனதால் அரசு இலப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை. 

 



திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. சிறு குறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமாக பிரதான தொழிலாக திராட்சை விவசாயத்தை செய்து வருகிறார்கள். கடந்த காலங்களில் ஒரு கிலோ திராட்சை 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூபாய் 80 க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் இந்த 80  ரூபாய் விலைக்கு விற்பதற்கு தங்கள் திராட்சை பழங்களை அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகளுக்கு தொடர்மழை பேரதிர்ச்சியை தந்தது.

மழையின் காரணமாக பழங்கள்  வெடித்து அழுகி கீழே  கொட்டுகின்றன. மற்ற பகுதிகளில் விளையும் திராட்சை யோடு இந்தப் பகுதி திராட்சை ஒப்பிடும்போது மிகவும் தரமானது. 10 நாட்கள் வரை கெடாது, உதிரவும் உதிராது. ஆனால் மழை காரணமாக கடுமையான சேதாரத்தை திராட்சை விவசாயிகள் சந்தித்துள்ளனர். ஒரு ஏக்கர் முதல்  இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறு குறு விவசாயிகள் பயிரிட்டு வந்த திராட்சை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நல்ல மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதற்காக விவசாயிகள் தங்க நகைகளை கிராமக் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பணத்தைப் பெற்று உரம் பூச்சி மருந்து தெளித்து வளர்த்த இந்த திராட்சைப் பழங்கள், அழிவுக்கு உள்ளாகும் போது கண்ணீர் விட்டு கதறும் நிலைதான் உள்ளது.



அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்லும் பொழுது விவசாயிகளின் முகங்களில் சோகம் அப்பிக் கொள்கிறது. இனி இந்த திராட்சைகளை அறுவடை செய்ய முடியாது என்று நொந்துபோன விவசாயிகள், வேதனையோடு தங்கள் மாடுகளுக்கு தீவனமாக வழங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டும், வேளாண் அதிகாரிகள் ஆறுதலுக்கு கூட வருவதில்லை என்று வேதனைப்படுகிறார்கள் விவசாயிகள்.

இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தரப்பில் எந்த உதவியும் செய்வதில்லை. கிராம அதிகாரிகள் தங்கள் கிராம கணக்குகளில் இந்த சேதாரம் குறித்து பதிவு செய்வதுமில்லை . இதனால் இப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்தை நம்பாமல் முழு நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு ஏக்கரில் 5 ஆயிரம் டன் திராட்சை மகசூல் கிடைக்கும், அதன் மூலம் பல லட்ச ரூபாய் வருமானம் ஈட்டும் நிலை இருந்தது. ஆனால் இப்போது முதலுக்கே மோசம் வந்தநிலைதான். இந்தப் பகுதியில் உள்ள 500 ஏக்கரில் பல லட்சம் டன் திராட்சை பழங்கள் மழை காரணமாக நாசமாகி உள்ளன.



விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .இந்தப் பகுதி திராட்சை  விவசாயிகளை வேளாண் துறையினர் நேரடியாக சென்று பார்வையிட வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட  இப்பகுதி திராட்சை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். அல்லது திராட்சை விவசாயத்திற்காக வைக்கப்பட்ட கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

 

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு...