தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகி வருகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது தான் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் ஆனால் இந்த ஆண்டு சற்று மாறாக ஏப்ரல் முதலே 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், கரூர் பரமத்தியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து, ஈரோட்டில் 44 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 42.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 42 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 42 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 42.2 டிகிரி செல்சியஸ், திருச்சி 42.7 டிகிரி செல்சியஸ், வேலூர் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூரில் கடந்த இரண்டு நாட்களாக 44 டிகிரி செல்சியஸ் அதாவது 112 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.
கொடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்பதால் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், அதிகபட்ச வெப்பநிலை காரணமாக வட உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.