சாகசத்தால் ஏற்படும் தீமை
  


சமீபகாலமாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வெயில் சூட்டை தணித்து வருகின்றனர். சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றாலும், ஒரு சிலர் பாதுகாப்பில்லாத இடங்களுக்கு சென்று கோடை விடுமுறையை கழிப்பதால், அப்படி செய்பவர்களின் உயிர் கேள்விக்குறியாகி விடுகிறது. குறிப்பாக இளைஞர்கள் கைவிடப்பட்ட கல்குவாரிகள், கடலின் ஆழமான பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குளிக்கும் பொழுது அவர்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில் கோடை விடுமுறையை கழிப்பதற்காக கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


கைவிடப்பட்ட கல்குவாரி 


செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஐந்து இளைஞர்கள் குளிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள கீரப்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். சுமார் 200 அடி ஆழமுள்ள இந்த கல்குவாரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் கைவிடப்பட்ட கல்குவாரியாக உள்ளது. ஆனால் அதை மீறி கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் கோடை வெயிலை முன்னிட்டு மாணவர்களுடன் இணைந்து குளிப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்துல் பாசித், சூர்யா திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் சாரதி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் சாரதி அனைவரும் ஜாலியாக கல்குவாரியில் குளித்துள்ளனர். 


காத்திருந்த எமன்


இந்த இடத்தில் கல்குவாரி இருப்பது குறித்த தகவல் அவர்கள் சமூக வலைதளம் மூலம் தெரிந்து கொண்டதாகத் தெரிகிறது. 5 நண்பர்களும் ஜாலியாக கல்குவாரியில் குளித்து கொண்டிருந்த பொழுது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். ஐந்து பேருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் ஆழமான பகுதிக்கு சென்ற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் சாரதி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் முழ்கி மாயமானார்கள். உடன் வந்திருந்த நண்பர்கள் தேடியும் கிடைக்காததால் உடனடியாக இதுகுறித்து அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மறைமலைநகர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவர்களின் உடல்கள் தேடும் பணி நடைபெற்றது


ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் முகமது இஸ்மாயிலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 14 மணி நேரத்திற்கு பிறகு மேலும் இரண்டு மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


எப்படி வந்தார்கள் ?


வெளியூர் மாணவர்கள் எப்படி இந்த கல்குவாரிக்கு வந்தார்கள் என போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதள பக்கங்களில் இந்த கல்குவாரி குறித்து ஏதாவது வீடியோக்களை பார்த்து மாணவர்கள் இங்கு வந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணையை போலீசார் முடக்கி விட்டுள்ளனர். கோடை வெயில் காலங்களில் இது போன்ற கல்குவாரிகளின் குட்டைகள், குளங்கள் ஏரிகள் ஆகியவற்றில் குளிக்கக் கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.