தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று ஒரு புறம் மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் வருவாய் இழப்பு, விலை உயர்வு என பல்வேறு காரணிகள் தமிழக மக்களை வாட்டி வதைக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கின்றன.


இந்த விலைவாசி உயர்வுக்கு பதுக்கல், கடத்தல் என பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக விளங்குவது தினசரி ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலைதான் என்றால் அது மிகையாகாது. பெட்ரோல், டீசல் விலை என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி. டீசல் விலை உயர்வில் காரணமாக, நாட்டின ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமில்லாமல் வாகனக் கட்டணங்கள் உயர்ந்து, அனைத்து வகைப்பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். இந்த விலை உயர்வு காரணமாக, பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள், சந்தைக்கு பொருட்களை எடுத்துச்செல்லும் வியாபாரிகள், சாதாரண பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.




தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில்கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5-உம், டீசல் விலை ரூபாய் 4-உம் குறைக்கப்படும் என்று அறிவித்தது. தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 93.17ம், டீசல் லிட்டருக்கு ரூபாய் 86.65க்கும் விற்பனை செய்யப்பட்டது. தி.மு.க. பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 97.43-ம், டீசல் விலை ரூபாய் 91.64க்கும் விற்பனையாகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு பெட்ரோல் விலை 4 ரூபாய் 28 காசாகவும், டீசல் விலை 4 ரூபாய் 99 காசாகவும் உயர்ந்துள்ளது.


தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில், குறிப்பிட்டுள்ளதைப் போல பெட்ரோல் விலையை ரூபாய் 5, டீசல் விலை ரூபாய் 4 குறைக்கவும், பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.