முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முதன்முறையாக ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் பல விவரங்களைத் தெரிவித்துள்ளார். அவர் இன்று தெரிவித்துள்ளதையும் தர்மயுத்தம் நடத்தி ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியதையும் சற்றே ஒப்பிட்டு பார்க்கலாம்.


இன்று அவர் கூறியவை:


* கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்குத் தெரியாது. உதவியாளர் சொல்லித்தான் எனக்கு அந்த விஷயமே தெரியவந்தது 
*  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தான் நான் அவ்வப்போது தெரிந்துகொண்டேன்.
* ஜெயலலிதாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருந்ததைத் தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
* ஜெயலலிதா மருத்துவமனையில் நடத்திய காவிரிக் கூட்டம் குறித்து எனக்குத் தெரியாது. 
*ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயலலிதாவிற்கு இதயபாதிப்பு ஏற்பட்டது பற்றி விஜயபாஸ்கர் கூறினார்.
* இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை அளிக்கப்ப்டடது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
* பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன்.


இவைதான் ஓபிஎஸ் இன்று ஆணையத்தில் தெரிவித்தவற்றில் ஹைலைட்.




அன்று அவர் பேசியவை..


இதே ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பிப்ரவரி 2017ல் மெரினாவில் தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்போது ஆட்சியில் மக்களும் தொண்டர்களும் விரும்புவர்களே அமர வேண்டும் என்றார்.


சசிகலாவை முதல்வராக்க அதிமுகவில் சிலர் முயற்சி செய்த அவ்வேளையில் தர்மயுத்தம் நடத்தி ஜெ. மரணத்தில் விசாரணை தேவை என்று ஓபிஎஸ் கூறியது அதிமுகவின் பிளவுக்குக் காரணமானது. சசிகலா சிறை சென்றுவிட அதிமுக ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி பிரிந்து கிடந்தது.


இரு அணிகள் இணைப்புக்கான முயற்சியின் போதெல்லாம் ஜெ மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்பதே ஓபிஎஸ்ஸின் வலியுறுத்தலாக இருந்தது.


2017 பிப்ரவரி கடைசியில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்து ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு கொடுத்தார். அதில் ஜெ மரணம் தொடர்பாக தங்களின் சந்தேகங்கள் எனக் கூறி ஓபிஎஸ் அணி ஒரு பெரிய பட்டியலையே இணைத்திருந்தது.


பின்னர் மார்ச் மாதம், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது ஒருமுறை கூட தன்னை ஜெயலலிதாவை சந்திக்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை என்றொரு குண்டைப் போட்டார். ஜெயலலிதா மறைவுச் செய்தி தாமதமாக வெளியிடப்பட்டதாக சர்ச்சையைக் கிளப்பினார். ஜெயலலிதா மர்ம மரணத்தில் விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி என்றார்.


இத்தனையும் சொல்லிய அவர், அணிகள் இணைந்த போது எனக்கு தனிப்பட்ட முறையில் அம்மா மறைவில் சந்தேகம் இல்லை. மக்கள் எழுப்பிய சந்தேகங்களை தான் நான் எழுப்பினேன் என்றார் ஓபிஎஸ். இந்நிலையில் இன்று விசாரணை ஆணையத்தில் மீண்டும் விஜயபாஸ்கரை கோர்த்துவிட்டு எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார்.


அன்று 20% தான் கூறியிருக்கிறேன் என்று ஜெ. மரணம் பற்றி பேசியவர் இன்று எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறியிருப்பது பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


அவர் தொடங்கிவைத்த விசாரணை சர்ச்சை அவரையே இறுக்கத் தொடங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்!