முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அவரிடம் நாளையும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மணி நேரத்திற்கு மேலாக இன்று நடைபெற்ற விசாரணையில் அவரிடம் சுமார் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தரப்பில் சில விளக்கங்களும் பதில்களும் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற விசாரணையில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் கூறினேன். அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் கூறினார்.
மறுநாள் காலை அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தினேன். ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விஜயகுமார் ரெட்டி கூறினார்” என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவிருத்தார்.
ஆணையத்தில் ஆஜரான ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும், 4 நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதிலளித்துள்ளார்.
மேலும், “சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர்கள் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும்.அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா, சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை.நோயின் தன்மையை பொறுத்து வெளிநாடுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிசிக்சை அளிக்க அரசியல் பிரபலங்களை உயர்சிகிச்சைக்காக அழைத்து செல்வது தவறு இல்லை.தர்மயுதம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே.
சசிகலாவின் அழைப்பிதழ் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது” என ஒபிஎஸ் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்