சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இபிஎஸ் தலைமையில் இன்று (அக்.16) மாலை தொடங்கிய கூட்டம் தற்போது நிறைவு பெற்றது.


இபிஎஸ் தலைமையில் கூட்டம்:


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், நாளை தொடங்கவுள்ள நிலையில், மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவுள்ள எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இக்கூட்டம் முடிந்தவுடன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஓ.பன்னீர்செல்வம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுக ஆலோசனைக் கூடத்தில் ஏன் ஓபிஎஸ் குறித்து பேச வேண்டும்.


நாங்கள் அனைத்து விவகாரங்களிலும் திமுகவை எதிர்த்து செயல்படுறோம், ஆனால் ஓபிஎஸ் தரப்பு ஏன் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


கருணாநிதி என்றுதான் ஜெயலலிதா பேசுவார், ஆனால் ஓபிஎஸ் அப்படி இல்லை, திமுக மீது ஓபிஎஸ்க்கு அவ்வளவு பாசம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.








ஓபிஎஸ்:

 

இந்நிலையில், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.




 


அப்போது அவரிடம், சபாநாயகருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் வேறு ஒருவரை நியமனம் குறித்து, இபிஎஸ் தரப்பு கடிதம் கொடுத்ததை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள் என ஓபிஎஸ்ஸிடம் கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டப்பேரவைத் தலைவர் தான் இறுதி முடிவு. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்படுவோம். மேலும், தமிழ்நாடு மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிகழ்வுகள், அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எல்லாம் எதிர்க்கட்சி என்ற முறையில் பல்வேறு வாதங்களை முன்வைத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.