சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 12-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதன் காரணமாக பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 13ம் தேதி துரைசாமி நியமிக்கப்பட்டாலும் வருகிற 22-ஆம் தேதியே இவரும் ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து, உச்சநீதிமன்ற கொலீஜியம் முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. பின்னர் கடந்த மாதம் பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முனீஷ்வர்நாத் பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வரும் 13-ஆம் தேதி முதல் எம்.துரைசாமி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வரும் 22ஆம் தேதியுடன் எம்.துரைசாமியின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளதால், அதற்குள்ளாகவோ அல்லது 23-ம் தேதியோ புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: வங்கிக் கொள்ளை வழக்கு: காவல் ஆய்வாளர், நகை பட்டறை உரிமையாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
இது தொடர்பான தகவல்களை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், வரும் 13-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.